×

வீடு கட்டித் தருவதாக கூறி பணமோசடி: பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் கைது.! அமலாக்கத்துறை நடவடிக்கை

புதுடெல்லி: வீடு கட்டித் தருவதாக கூறி பொதுமக்களிடம் மோசடி செய்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர் அரோராவை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது. டெல்லி, அரியானா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ரியல் எஸ்டேட் நிறுவன தொழிலை அரோரா என்பவர் நடத்தி வந்தார். அவரது நிறுவனம், ஆயிரக்கணக்கான மக்களிடம் பெரிய அளவில் பணத்தை பெற்றுக் கொண்டு, அவர்களுக்கான அடுக்குமாடி கட்டிடத்தை கட்டித் தரவில்லை. முன்பணமாக வாங்கிய தொகையையும் திருப்பித் தரவில்லை.

இதுதொடர்பாக அந்தந்த மாநில காவல் துறையினரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்தனர். இவ்விவகாரம் அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. பல மாநிலங்களில் தொடரப்பட்ட எப்ஐஆர்களின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அரோராவின் நிறுவனங்களில் சோதனையிட்டனர். அதன் தொடர்ச்சியாக அரோரா உள்ளிட்டோர் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘பணமோசடி குற்றத்தில் ஈடுபட்ட சூப்பர்டெக் லிமிடெட் மற்றும் குரூப் நிறுவனங்கள், பொதுமக்களிடம் இருந்து நிதி திட்டங்களை அறிவித்து பணம் வசூலித்துள்ளன.

ஆனால் அவர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்யவில்லை. பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட தொகையை, வெவ்வேறு நிதித் திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற்றி உள்ளனர். இந்த நிறுவனம் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்த தவறியது. சுமார் ₹1,500 கோடி கடன்கள் செயல்படாத சொத்துகளாக மாறிவிட்டது. உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள இந்த நிறுவனத்திற்கு சொந்தமான 25 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. தற்போது சூப்பர்டெக் குழும நிறுவன தலைவர் ஆர்.கே.அரோராவை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்று கூறியது.

The post வீடு கட்டித் தருவதாக கூறி பணமோசடி: பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் கைது.! அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Arora ,Dinakaran ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி